இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் நடைபெறும் மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது குஜராத் மாநிலம். குறிப்பாக அந்த மாநிலத்தில் சூரத் நகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சிசிடிவி கேமராக்களை வைத்து சாலைகளை யாரும் எச்சில், சிறுநீர், அசுத்தங்கள் செய்யதாவாறு கண்காணித்து வருகின்றனர். தவறு செய்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இதற்கிடையில் சூரத் நகராட்சியில் அத்வாலி தெருவில் ஒரு இளைஞர் சாலையில் செல்லும் போது, சாலையில் எச்சில் துப்பி சென்றுள்ளார். அதைப் பார்த்த அதிகாரிகள் அவரை விரட்டிப் பிடித்து அபராதம் விதித்தனர். இளைஞன் தன்னிடம், பணமில்லை என்று கூறியதும், சாலையிலேயே மன்னிப்புக் கேட்டபடி தோப்புக்கரணம் போட வைத்தனர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை அங்கு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால், இதனை சிலர் விமர்சனம் செய்தும் வருகிறார்கள். எச்சில் துப்பியதற்காக இளைஞரிடம் சட்டம் பேசும் அதிகாரிகள், சுகாதார நடவடிக்கையின் ஒரு பகுதியாக எச்சில் துப்ப தனி தொட்டி, கழிவறைகளை வைத்திருக்க வேண்டியதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.