தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்காகக் கடந்த வாரம் மாநிலத் தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து, ஆலோசனை நடத்தி இருந்தது. அதே சமயம் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முடிவடைய உள்ள சூழலில் அதற்கான தீவிர ஆலோசனைகள் நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு 5 மாநிலத் தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, அந்த 5 மாநிலங்களில் நவம்பர் 7 முதல் 30 ஆம் தேதி வரை சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தெலங்கானா உட்பட சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல அரசு அதிகாரிகளை அதிரடி இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக 5 மாநிலங்களில் உள்ள 25 காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், 9 மாவட்ட ஆட்சியர்கள், 4 செயலர்கள் மற்றும் சிறப்பு செயலர்கள் உட்பட பல உயர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மற்றும் பஞ்சாப்பில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை ராஜஸ்தானுக்கு வந்து கொண்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஏதேனும் முறைகேடு நடக்க வாய்ப்பு இருக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அதன்படி, போதைப்பொருட்கள் வரும் வழியான ஹனுமன்கர், கரு மற்றும் பிவாடியின் எஸ்.பி.க்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோரை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதே போல், தெலங்கானாவில் 13 எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களை இடமாற்றம் செய்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தெலங்கானாவில், போக்குவரத்து செயலாளர், மதுவிலக்கு மற்றும் கலால் துறை இயக்குநர் மற்றும் வணிக வரி ஆணையர் ஆகியோர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது கடுமையான பணிச்சுமை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு கலால் துறை மற்றும் வணிக வரித்துறைக்கு தனி முதன்மை செயலரை நியமிக்கவும் தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதே போல், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.