சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் மாவட்டத்தின் விவசாயியும், கூலித்தொழிலாளியுமான 24 வயது சந்து மௌரியா, தனது இரண்டு காதலிகளையும், ஒரே நாளில் ஒரே மேடையில் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் சுமார் 500 பேர் முன்னிலையில் நடந்துள்ளது.
சந்து மௌரியா, தந்து டோகாபால் என்ற பகுதியில் வேலை ஒன்றிற்காக செல்லும்போது, சுந்தரி காஷ்யப் என்ற பெண்ணை சந்திக்க, இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இதன் பிறகு ஒரு வருடம் கழித்து, ஹசீனா பாகேல் என்ற இன்னொரு பெண், உறவினர் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சந்துவின் கிராமத்திற்கு வந்தபோது, அவர் மீது காதல் கொண்டார்.
ஹசீனா தனது காதலை சந்து மௌரியாவிடம் வெளிப்படுத்தியபோது, தான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிப்பதை சந்து ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஹசீனா, தொடர்ந்து சந்துவுடன் தொடர்பில் இருக்க, ஒரு கட்டத்தில் சந்து காதலித்த இரு பெண்களும், ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்டனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து சந்து மௌரியாவைக் காதலித்து வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து ஹசீனா, சந்துவின் வீட்டிற்கே வந்து வாழத் தொடங்யுள்ளார். இதை கேள்விப்பட்ட சுந்தரி காஷ்யப்பும் சந்து வீட்டிற்கு வந்துள்ளார். மூவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வது பற்றி உறவினர்களும், கிராமத்தினரும் கேள்வி எழுப்பவே தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த திருமண நிகழ்வு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.