இந்திய நாட்டின் தேசியக்கொடியைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது எனத் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
கனடாவில் ஹாலிபெக்ஸ் நகரில் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற வளாகத்தில், கலந்து கொண்ட சபாநாயகர்கள் தங்கள் நாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு பேரணியாக வந்தனர். அதில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் ஏந்தி வந்த கொடிகளில் மேட் இன் சீனா என அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் கனடாவிலிருந்து சென்னைக்கு இன்று திரும்பியபொழுது சென்னை விமான நிலையத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் "இந்தியத் தேசியக்கொடியை சீனாவில் தயாரித்து அதை நாடாளுமன்ற சபாநாயகர்களும் தமிழகத்தில் இருந்து கனடாவிற்கு சென்ற சபாநாயகர்களும் கைகளில் ஏந்திச் சென்றது எல்லோருக்கும் வேதனையான விஷயம் தான்" என கூறினார்.