கரோனா பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் மெல்ல மீண்டு வருவதாக இந்திய ராணுவ தலைமை ஜெனரல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸால் இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 5.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாக பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ள சூழலில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் மிகவேகமாக பரவி வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் மெல்ல மீண்டு வருவதாக இந்திய ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நாரவனே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "இதுவரை, முழு இந்திய இராணுவத்திலும் மொத்தம் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 2 மருத்துவர்கள் மற்றும் 1 நர்சிங் உதவியாளர் ஆவர். சிகிச்சையில் உள்ள நான்கு பேர் மெல்லக் குணமாகி வருகின்றனர். லடாக்கில் ராணுவ வீரர் ஒருவர் முழுமையாகக் குணமடைந்து பணியில் சேர்ந்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.