மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூரில் பழங்குடியின சமூகத்தை சார்ந்த பெண்ணை குடும்பத்தினரே கொடூரமாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்கில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், இளம் பெண்ணின் தந்தை மற்றும் மூன்று சகோதரர்கள், அந்த பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்து, மரத்தில் கட்டி வைத்தும் தடிகளால் கடுமையாக தாக்குகிறார்கள். அந்த பெண்ணை தாக்கும்போதே ஒருவர், அழுவதை நிறுத்து..இனிமேல் திரும்பி வருவாயா" என கேட்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
19 வயதான தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் அந்த பெண் தனது கணவர் வீட்டை வெளியேறி பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தந்தையும் சகோதரர்களும் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பெண் தாக்குதலுக்கு உள்ளான வீடியோ வைரலானதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அப்பெண்ணின் தந்தையையும் சகோதரர்களையும் கைது செய்துள்ளனர்.