மும்பையில் கடந்த அக்.02 அன்று கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில் பார்ட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பார்ட்டியில் பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், அக்.03 காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன்கானை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்று 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கானை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரும் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அக்.7 வரை நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டு உரியவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
ஆர்யன் கானை விசாரணைக்காக அழைத்து செல்லும்பொழுது உடன் கே.பி. கோசாவி என்ற நபரும் செல்வதாக தேசியவாத காங்கிரஸின் செய்தி தொடர்பாளரும், மகாராஷ்டிரா அமைச்சருமான நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்யன்கானுடன் செல்லும் கே.பி.கோசாவி தன்னை பாஜக துணைத்தலைவர் என குறிப்பிட்டுள்ளதாகவும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் நவாப் மாலிக் கூறியுள்ளார். இதற்கிடையே ஆர்யன்கானை விசாரணைக்கு அழைத்து சென்ற போது உடனிருந்தவர்களுள் ஒருவரான மணிஷ் பன்ஷாலி என்பவர் தான் பாஜகவின் விசுவாச தொண்டர் என்றும் போதை மருந்து கட்டுப்பாடு துறையில் ஒரு பகுதியாக இருந்து அவர்களுக்கு தகவல்களை வழங்கி வந்ததாகவும் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பை சொகுசு கப்பலில் போதைப் பொருள் இருந்ததாக நடத்திய சோதனையே ஒரு நாடகம். இந்த சோதனையானது நடிகர் ஷாருக்கானுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக அவரது மகன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்யன் கானை சந்திக்க வந்த கே.பி. கோசாவி அவருடன் செல்பி எடுத்து கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு வந்து சென்றதை மணிஷ் பன்ஷாலியும் ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் ஆர்யன் கான் நண்பன் அர்ப்பாஸ் மெர்சண்ட் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தன்னிடம் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே தெரியும் என்றும் தான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.