Skip to main content

காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் யார்?; அறிவிப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 Who are the judges hearing the Cauvery case?; The Supreme Court issued the notification

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 113 பக்க மனுவில், கடந்த 11 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள், வாதங்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்கள் குறித்தும் அந்த மனுவில் எடுத்துரைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 53 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துவிட்டுள்ளதாகவும், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

 Who are the judges hearing the Cauvery case?; The Supreme Court issued the notification

 

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகி காவிரியில் இருந்து நீர் திறப்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என வாதங்களை முன் வைத்தார். இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட், காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விசாரணை நடத்த இன்றைய தினமே 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று இது தொடர்பான எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபர்கள் மூன்று பேர் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த அமர்வில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கு வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்