உலக நாடுகளின் பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும் போது இந்தியாவில் கரோனா பாதிப்பு மூன்றில் ஒருபங்கு தான் இருப்பதாக உலகசுகாதார அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 90 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 13,000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கரோனா பரவல் நிலை குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிக மக்கள் தொகை அடர்த்தி இருந்தபோதிலும், ஒரு லட்சம் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் மிகக் குறைந்த பாதிப்பே இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு கரோனா பாதிப்பு 30.04 ஆக உள்ளது. அதேநேரம் உலக சராசரி இதனைவிட மும்மடங்காக 114.67 ஆக உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 55.77 சதவீதமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.