இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியானது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கவும், ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்கவும் சம்பந்தப்பட்ட மாநில கட்சி நிர்வாகிகள் சார்பில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கும் போதெல்லாம் அங்கு அமலாக்கத்துறை அனுப்பப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும் அமலாக்கத்துறை அனுப்பப்படுகிறது. அமலாக்கத்துறையானது அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது. இது சரியல்ல. அமலாக்கத்துறையுடனோ, சிபிஐயுடனோ எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் எந்த அழுத்தத்தின் கீழும் செயல்படக்கூடாது" என தெரிவித்தார்.