டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை வருகை தந்தனர். ஏராளமான போலீசாருடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அரவிந்த கெஜிரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதே சமயம் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு, வாரண்ட்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதேசயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலளார் பிரியங்கா காந்தி எனப் பல்வேறு தரப்பினரும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த கைது நடவடிகைக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இருந்தனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட உள்ளார்.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி கூறுகையில், “நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மிகவும் மரியாதையுடனும் பணிவாகவும் ஏற்க மறுக்கிறோம். 2 வருட விசாரணைக்கு பிறகும் அமலாக்கத்துறையிடம் ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை அவர்களின் சாட்சிகளை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியது. நாங்கள் அனைத்தையும் ஆராய்வோம். சாத்தியமான சட்ட வழிகள், நீதித்துறையின் முன் எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக குறிவைக்கப்படுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் டெல்லி முதல்வராக இருப்பார். அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக நீடிக்க கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் எந்த தடையும் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் இப்போது வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.