மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள நேஜாத் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜக கட்சியினர் இடையே நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறையில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய பாஜக அனுமதி கோரியது. இந்த இறுதி சடங்குகளுக்கான பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென முடிவை மாற்றிய பாஜக தொடர்ந்து 'இன்று பந்த்' அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை கொல்கத்தா எடுத்துச்சென்று அங்கு மாபெரும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தி மரியாதை செலுத்த பாஜக கட்சியினர் திட்டமிட்டனர். எனினும், இதற்கு அனுமதி மறுத்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை நெடுஞ்சாலை அருகிலேயே தகனம் செய்யும் படி கேட்டுக்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து உள்ளூரில் போராட்டம் நடத்தப்படும் என்றும், மாநிலம் முழுவதும் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், 12 ஆம் தேதி தலைமை காவல் நிலையம் நோக்கி பேரணி செல்லவும் பாஜக கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில், பாஜக 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் பரிஷத் மக்களவைத் தொகுதியில் நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய வெற்றி பேரணியின் போது கலவரம் மூண்டது. பாஜக கொடி கம்பங்கள் அகற்றப்பட்ட நிலையில், பல கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. முழு அடைப்பு காரணமாக மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பதற்றமான நிலை காணப்படுகிறது. அதே போல் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றன.
இதனால் அம்மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்படுள்ளது. இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த முகுல் ராய் கூறும்போது, பாஜக ஆதரவாளர்கள் மீது முதல்வர் மம்தா பானர்ஜி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மாநில பாஜக தலைமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மேற்குவங்க அரசிற்கு, மத்திய அரசு கடிதம் அளித்தது. அந்த கடிதத்தில், தொடரும் வன்முறை தொடர்பாக கடும் கவலை தெரிவித்தது. மேலும், மம்தா பானர்ஜி அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக கடைபிடிக்க தவறிவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.