நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.