Skip to main content

"திட்டமிடப்பட்ட தாக்குதல்" - அமைச்சர் மீது குண்டு வீசப்பட்டது குறித்து மம்தா குற்றச்சாட்டு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

MAMATA BANERJEE

 

மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் உசேன். முர்ஷிதாபாத் அருகே நிமிதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகிர் உசேன் மீது குண்டு வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாநில அமைச்சர் மீது இரயில் நிலையத்தில் குண்டு வீசப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

இந்தச் சம்பவத்தில் அமைச்சர் ஜாகிர் உசேன் உட்பட 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 14 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் ஜாகிர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட சதி எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், “இது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல். இது ஒரு சதிச்செயல். ஜாகிர் உசேனை தங்ளோடு இணையும்படி சிலர், கடந்த சில மாதங்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இதற்குமேல் எதையும் வெளியிட விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ரயில் நிலையத்தில் தாக்குதல் நடந்திருக்கும்போது, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த தங்கள் பொறுப்பை ரயில்வே எவ்வாறு மறுக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட வழக்கை, மேற்கு வங்க அரசு சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளது. மேலும் இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்