தனது கிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவலர்களின் உடலை எரித்துச் சாம்பலாக்கி ஆதாரங்களை அழிப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக விகாஸ் தூபே விசாரணையில் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே என்ற ரவுடியைக் கடந்த வாரம் போலீஸார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டி.எஸ்.பி. உள்ளிட்ட எட்டு போலீஸார் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் தூபே மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் நேற்று (09/07/2020) கைதானார். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய மத்தியப்பிரதேச போலீஸார், பின்னர் உத்தரப்பிரதேச போலீஸாரிடம் விகாஸ் தூபேவை ஒப்படைத்தனர். மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பாதுகாப்புடன் போலீஸார் அழைத்து வரும் போது விகாஸ் தூபே இருந்த வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயன்ற விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீஸார் விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை விகாஸ் தூபே தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சவுபேபூர் காவல் நிலையப் போலீஸார் சிலருடன் நட்பிலிருந்த விகாஸ் தூபே, தனக்கு எதிராகச் செயல்பட்ட டி.எஸ்.பி.-யான தேவேந்திர மிஸ்ராவை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில், ஜூலை இரண்டாம் தேதி நள்ளிரவு தேவேந்திர மிஸ்ரா தலைமையில் ஒரு போலீஸ் படை தம்மைக் கைது செய்ய வருவதாக விகாஸுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு வைத்தே தேவேந்திர மிஸ்ராவைக் கொல்லத் திட்டத்திட்ட விகாஸ், அவரை கொன்றபின் ஆதாரங்களை அழிக்கும் வகையில், அவரது உடலை எரிக்கவும் திட்டமிட்டதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். உடலை எரிப்பதற்காகச் சுமார் 15 லிட்டர் எரிபொருளை வாங்கி வைத்துள்ளார் விகாஸ்.
இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அங்கு வந்த காவல்துறையினரைத் தனது கூட்டாளிகளின் உதவியோடு சுட்டுக் கொன்ற விகாஸ், அவர்களது உடலை எரிக்க முடியாத சூழலில், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணையில் தெரிவிக்கையில், "நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். அந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதால் தான் எனக்கு இந்த நிலைமை. இதை நான் செய்திருக்கக் கூடாது" என விகாஸ் கண்ணீர்விட்டு அழுததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விகாஸுக்கு உளவு கூறிய சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கே.கே.சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.