காரை நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்கச் சென்ற நேரத்தில் தானாகக் கிளம்பிய கார் சாலையின் ஓரத்தில் உள்ள வாய்க்காலில் விழுந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் செருபுன்கால் பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த சாலையோர டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தானாகவே புறப்பட்ட கார், சாலையின் மறுபுறத்திற்கு வளைந்து சென்று புதர்களைத் தாண்டி சாலையோர ஓடை பள்ளத்தில் விழுந்தது.
அந்த வழியாக நடந்து சென்ற கல்லூரி மாணவி ஒருவர் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது கண்டு அதிர்ச்சி அடைத்தார். யாரோ ஒருவர் காரை ஓட்ட கார் விபத்துக்குள் சிக்கியதாக நினைத்த மாணவி கூச்சலிட்டார். மாணவியின் கூச்சலைக் கேட்டு டீ குடித்துக் கொண்டிருந்த ஓட்டுநர், தன்னுடைய கார் காணாமல் போனதைக் கண்டு அவரும் அதிர்ந்தார். கார் எங்கு சென்றது என்பது தெரியாமல் ஓட்டுநர் காரை தேடிய நிலையில், அந்த மாணவி ஓடை பள்ளத்தில் விழுந்ததாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கார் ஓட்டுநர் ஓடைப் பள்ளத்திற்கு ஓடினார். இந்த சம்பவம் நிகழ்ந்த பொழுது சாலையில் யாரும் செல்லாததால் விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் கார் எவ்வாறு தானாக ஓடியது என்பது பெரும் கேள்வியாக உள்ளது. அமானுஷ்ய வீடியோ என இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.