மாநிலங்களவை எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வைகோ இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் எம்.பி ஆகியுள்ள வைகோ நேற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, "பிரதமர் மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவன் நான். அப்படியிருந்தும் அவர் என்னை அன்போடு வரவேற்றார். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. மோடி என்னிடம், நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள் என கூறினார். அதற்கு நான் கொள்கையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயல்படுகிறேன் என தெரிவித்தேன்.
அதன்பின் நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, ஆந்திராவில் 20 அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் மூலம் கொன்ற விவகாரம், நதிகள் இணைப்பால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கான தீர்வு ஆகிய 3 விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினேன். மேலும் தமிழ் ஈழம் குறித்தும் பேசினோம்" என தெரிவித்துள்ளார்.