உத்தரப்பிரதேச மாநிலத்தில், மாநில விவகாரங்களைக் கையாளும் பொது சேவைத்துறைகள், நிறுவனங்கள், உள்ளூர் ஆணையங்கள் ஆகியற்றில் வேலை செய்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட ஆறு மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலின் காரணமாக அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளதாக லைவ் ஹிந்துஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம், கரோனா பரவலைக் காரணம் காட்டி உத்தரப்பிரதேச அரசு, அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்த ஆறு மாதம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போராட்டங்களுக்கான தடை மேலும் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் உத்தரப்பிரதேச அரசு அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் போராட்டம் நடத்த தடை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு, ஒருவருடம்வரை சிறை தண்டனையோ, 1000 ரூபாய் அபாரதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.