கர்நாடக மாநிலத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் உத்தர கன்னட மாவட்டம் அங்கோலா தாலுகாவிற்கு உட்பட்ட சிரூர் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (16.07.2024) காலை மிகப்பெரிய மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் ஒரு வீடும், தேநீர் கடை ஒன்றும் சிக்கியது.
அப்போது அங்கிருந்தவர்களில் ஏழு பேர் இந்த மண் சரிவில் சிக்கிருக்கலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இந்த மண் சரிவில் மொத்தம் 12 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதே சமயம் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வீட்டில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மகள் மற்றும் மகன், உறவினர் ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தேசிய நெடுஞ்சலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.