டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகிகளை மாற்றுவது குறித்து அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பாஜக கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா உள்ளார். அதே போல் மத்திய உள்துறை அமைச்சராகவும் அமித்ஷா பதவி வகித்து வருகிறார். ஒருவர் இரு பொறுப்புகளில் பதவி வகிப்பது பாஜக கட்சியின் கொள்கைக்கு எதிரானது.
இருப்பினும் மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் சற்று குறைவாக உள்ளதால் பாஜக கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா நீடிப்பார் என பாஜக தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக கட்சி சட்ட விதியில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக கட்சி உள்ளது. கட்சியில் உள்ள சட்ட விதியை திருத்துவதற்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் தேவை. அதன் பிறகு இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சி விதிகளின் திருத்தம் மேற்கொண்டதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது தான் பாஜக கட்சியில் ஒருவர் கட்சியிலும், ஆட்சியிலும் இரட்டை பதவிகள் வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விரைவில் பாஜக கட்சியின் உயர்மட்ட குழு கூடி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக 2014 ஆம் ஆண்டு பாஜக கட்சியின் தேசிய தலைவராக தற்போதைய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இருந்தார். அவர் மத்திய அமைச்சராக பதவியேற்றவுடன் தனது கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தது நினைவுக் கூறத்தக்கது.