பாலியல் வன்கொடுமைக்குள்ளான இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணையில் பங்கேற்பதற்காக அந்த பெண் வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தி, தீ வைத்துள்ளது. இந்த கும்பலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியான நபரும் இருந்துள்ளான்.
இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையிலேயே அந்த பெண் சாலையில் உதவிக்காக கதறியபடி ஓடியுள்ளார். இதனையடுத்து தீப்பிடித்து எரிந்த நிலையலேயே அவசர உதவிக்கு அவரே தொடர்புகொண்டதாக அங்கிருந்த ஒரு பெண் தெரிவித்துள்ளார். அவரை மீட்ட அங்கிருந்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். இதனையடுத்து 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக டெல்லி கொண்டுசெல்லப்பட்டார். பெண்ணை தீவைத்து எரித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கானா மருத்துவர் கொலை என்கவுண்டர் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், உன்னாவ் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.