நிர்பயா, ஆசிபா முதல் சமீபத்தில் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டது வரை பெண்களுக்கான பாலியல் வன்முறைகளும் கொடுமைகளும் நாளுக்கு நாள் அரங்கேறித்தான் வருகின்றன. அப்படி மீண்டும் ஒரு பெண் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை மீண்டும் நாட்டையே உலுக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைன் நகரில் 12 வயது சிறுமி ஒருவர் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பட்டப்பகலில் வீதி வீதியாக அழுதபடி நடந்து சென்ற அந்த காட்சிகள் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் ரண வேதனையை நிச்சயமாக ஊட்டும். ஆடைகள் கிழிந்த நிலையில் உதவி கேட்ட அந்த சிறுமிக்கு யாருமே உதவ முன்வரவில்லை. பிறப்புறுப்பில் ரத்தம் சொட்ட சொட்ட அந்த சிறுமி அழுது கொண்டே நிற்கும் காட்சியும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் உதவி கேட்க 'போ போ இங்கெல்லாம் நிற்காத' என்று சைகையில் துரத்தி விடும் காட்சியும் பெண்களுக்கு எதிரான கோரமுகத்தை இன்னமும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
சொல்லில் சொல்லமுடியாத வலியுடன் அந்த சிறுமி சுமார் இரண்டு மணிநேரம் 8 கிலோ மீட்டர் இதே நிலையில் நடந்திருக்கிறார். இந்த 8 கிலோமீட்டர் பயணத்தில் ஒரு மனித மனம் கூட அவருக்கு உதவி செய்ய மறுத்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இறுதியில் நடக்கத் தெம்பின்றி அந்த சிறுமி மயங்கி விழுந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னரே இதற்கான கண்டனக் குரல்களும் போராட்டங்களும் எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்த சம்பவம் குறித்து விசாரிக்க அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளார்.
தற்பொழுது சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜே வாலா, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், மம்தா பேனர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.