Skip to main content

“பிரிவினை சூழலை உருவாக்க எதிரி நாடுகள் தீவிரம்” - மத்திய அமைச்சர்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 Union Minister says Enemy countries are serious about creating a divisive environment

 

சீனாவுக்கு ஆதரவாகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய அமெரிக்க கோடீஸ்வரர் நெவில் ராய் சிங்கம் என்பவரிடம் இருந்து பணம் பெற்றதாகப் புகார் எழுந்ததால், டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்குத் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் 3 ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமின்றி நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களிலும் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்த புகார் தொடர்பாகச் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா சட்டம் - UAPA) கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு கடந்த 3 ஆம் தேதி டெல்லி போலீசார் சீல் வைத்திருந்தனர். மேலும் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தாவை டெல்லி போலீசார் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இவருடன் நியூஸ் க்ளிக் ஊடகத்தைச் சேர்ந்த நிர்வாகி அமித் என்பவரும் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், 

 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழக வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் நியூஸ் கிளிக் விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. 

 

அதற்கு பதில் அளித்த அவர், “நமது நாட்டில் தற்போது 83 கோடி பேர் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது 2025 - 2026ஆம் ஆண்டுக்குள் 124 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையதளங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவை பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் வைத்திருக்க மத்திய அரசு உறுதி ஏற்றுள்ளது. தவறான தகவல்களை செய்தி மற்றும் இணையதளங்கள் வாயிலாக பகிர்வது என்பது இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு நம் நாட்டில் பிரிவினைகளையும், அமைதியற்ற சூழலையும் உருவாக்க நமது எதிரி நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த தேவையான தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மற்றும் விதிகள் ஏற்கனவே அமலில் இருக்கின்றன. இந்த விஷயத்தில் இணையதள ஊடகங்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்