கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது. கொள்ளையர்களும், திருடர்களும் நாட்டில் சுதந்திரமாக உள்ள நிலையில், ராகுல் காந்தி மட்டும் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை. அனைத்து விசாரணை அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டும் நேரம் தொடங்கிவிட்டது” என்று கூறியுள்ளார்.