கரோனா காலத்தில் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை வழங்காதது பாவச்செயல் என மஹாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" எனக் குறிப்பிட்டார். மேலும், கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மூன்று லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பை ஈடுகட்ட மாநில அரசுகளுக்கு இரண்டு தெரிவுகளை அவர் வழங்கினார். அதன்படி, மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்று, வரி வருவாய் அதிகரித்த பின்னர் அதனைத் திருப்பி செலுத்தலாம் அல்லது, மாநில அரசுகளே பற்றாக்குறை தொகையை ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், இதுகுறித்து மேலவைக்கூட்டத்தில் பேசிய மஹாராஷ்ட்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "இதுவரை மத்திய அரசு மராட்டியத்திற்குத் தரவேண்டிய சுமார் ரூ.22 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை வழங்கவில்லை. உரியத் தொகையை வழங்குவதற்கு பதிலாக நம்மைக் கடன் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்துகிறது, இது ஒரு பாவச்செயலாகும். நமக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. தொகையை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் ஒருமித்த குரலில் வலியுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்.