புதுச்சேரியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பெருமாள்புரத்தில் 25 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் 24 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் குடியிருப்பதற்கான ஆதாரங்களான ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு என அனைத்தும் வைத்துள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு நில அளவைத் துறை இயக்குநர் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மேற்சொன்ன இடத்தை நில அளவைத் துறைக்கு மாற்றம் செய்யக் கேட்டுள்ளார். இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், அம்மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படவில்லை. எனவே, இதில் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், வருவாய்த்துறை செயலர், ஆட்சியர், துணை ஆட்சியர் (தெற்கு), நில அளவைத் துறை இயக்குநர் ஆகியோருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.