
நாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பலகட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியது. போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்தது. இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாக நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் தாங்கள் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை, இது வெறும் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.