குஜராத் மாநிலத்தில் பிச்சை எடுத்து வந்த நபர் பசியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர், வல்சாத் என்ற பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர், கடந்த இரண்டு நாட்களாக காந்தி நூலகம் அருகே உள்ள சாலையோரத்தில் படுத்திருந்ததைக் கண்ட அந்தப் பகுதி கடைக்காரர் ஒருவர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை மீட்டு வல்சாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்த நபருக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில், அவர் இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால்தான் இறந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, அந்த நபரிடம் இருந்த சிறு பிளாஸ்டிக் பையை எடுத்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த பையில், 1.14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது. அதில், ரூ.500 நோட்டுக்கள் 38, ரூ.200 நோட்டுக்கள் 83, ரூ.100 நோட்டுக்கள் 537, மற்றும் ரூ.10, 20 நோட்டுக்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த நபரின் விபரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கையில் 1.14 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் சாப்பிடாமல் இருந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.