இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எந்தவித நிதியையும் ஒதுக்கவில்லை என்று சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து கூறிய அவர், “நாடாளுமன்றத்தில் இடைக்காலப் பட்ஜெட்டை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்திருக்கிறது. அதிலும் கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கறுப்பு சட்டை அணிந்து திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக திமுக பாராளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், புயல் வெள்ள நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக மற்றும் தோழமை எம்.பி.க்கள் கறுப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.