அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வென்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, அங்கு முதல்வராக பஜன் லால் பொறுப்பேற்றார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், பேரரசர் அக்பர் குறித்து பேசிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.
பள்ளி பாடத் திட்டங்களை ராஜஸ்தான் மாநில அரசு மாற்றி வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கல்வி அமைச்சர் மதன் திலாவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாங்கள் எதையும் மாற்ற விரும்பவில்லை. சில நெறிமுறையற்ற தகவல்களை திருத்த விரும்புகிறோம். நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, அக்பர் மிகப்பெரியவர் என்று படித்தோம். நானும் அதைத்தான் படித்திருந்தேன். ஆனால் அவர் ‘மீனா பஜார்’ என்ற இடத்தை அமைத்து அழகான பெண்களை அழைத்துச் சென்று அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாலியல் வன்கொடுமை செய்பவர் எப்படி பெரிய ஆளுமையாக இருக்க முடியும். அக்பர் ஒரு சிறந்த ஆளுமையாக இருந்ததில்லை. அவர் ஒரு ஆக்கிரமிப்பாளராகவும், பாலியல் வன்கொடுமை செய்பவராகவும் தான் இருந்தார். அக்பரின் பெயரை இந்தியாவில் வைப்பதே பாவம். அக்பர் ஒரு படையெடுப்பாளர். அவருக்கும் இந்திய மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பல பாடப் புத்தகங்களில் சாவர்க்கர் தேசபக்தர் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீர் சாவர்க்கர், சிவாஜி போன்ற நம் முன்னோர்களைப் பற்றி பல தவறான தகவல்கள் உள்ளன. அந்த அறிக்கைகள் சரி செய்யப்படும். இன்னும் சில நாட்களில் எல்லாப் பள்ளிகளிலும் ‘சூர்ய நமஸ்காரம்’ வழக்கமாகிவிடும்” என்று கூறினார். அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சருக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.