ஆண்டு முழுவதும் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க நாடு முழுவதும் பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. முக்கிய திருத்தலங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விசேஷ நாள்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். ஆனால் திருப்பதியிலோ வருடம் முழுவதும் கூட்டம் அலை போதுவது வாடிக்கையான நிகழ்வாகும். திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால் விஐபிகள் எளிமையாக சுவாமி தரிசனம் செய்யலாம். இந்நிலையில் 10,000 ரூபாய் அளித்தால் யார் வேண்டுமானாலும் விஐபி வரிசையில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது, " ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமென்றாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்க 10,000 முதல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும் " என்று கூறினார். மேலும் பேசிய அவர், பத்தாயிரம் ரூபாய் நன்கொடையோடு, விஐபி தரிசனத்திற்கான 500 ரூபாய் டிக்கெட்டையும் பெற்றால், காலையில் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். விரைவில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தி டிக்கெட் பெறும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.