சர்தார் வல்லபாய் படேலின் 143 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு படேலின் சிலை உருவாக்கப்பட்டது . சுமார் ரூ. 2900 கோடி செலவில் 182 மீட்டர் உயரத்தில் உலகின் உயர்ந்த சிலையாக கட்டப்பட்ட இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த சிலை குஜராத்திலுள்ள நர்மதா அணைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது. சர்தார் வல்லபாய் படேல் சிலையின் திறப்பு விழாவிற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். இந்த நிலையில், உலகில் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமாக, பிரதமர் மோடிக்கு சிலை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
மஹாராஸ்டிரா மாநிலம் புனே அருகே லவாசா மலைவாசஸ்தலம் அமைந்துள்ளது. இந்த இடம் சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடமாகவும் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தில் பல்வேறு வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனமான டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக இங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு 190 மீட்டர் முதல் 200 மீட்டர் அளவில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் சிலை திறப்பு விழாவிற்கு இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாட்டு தூதர்களை அழைக்கவும் டார்வின் பிளாட்பார்ம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, டார்வின் பிளாட்பார்ம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் ஹரிநாத் சிங் அளித்த பேட்டியில், “இந்திய நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற பிரதமர் மோடி தன்னால் முடிந்த வரை அத்தனையும் செய்து வருகிறார். அதனால், பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக உலகிலேயே மிகப்பெரிய சிலையை உருவாக்க முடிவு செய்துள்ளோம். நாட்டின் தொலைநோக்கு செயல் திட்டம், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் பிரதமர் மோடிக்கு லவாசாவில் அமைக்கப்படும் சிலை நாட்டின் அழிக்க முடியாத அடையாள சின்னமாக இருக்கும். இந்த சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் படேல் சிலையை விட உயரமானதாக, அதாவது 190 மீட்டர் முதல் 200 மீட்டர் வரையிலும் இருக்கும். இந்தச் சிலையை வரும் டிசம்பர் இறுதிக்குள் கட்டி முடித்து திறக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த சிலையை சுற்றி, பொழுதுபோக்கு மையம், நினைவுப் பூங்கா, இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சிக் கூடம் போன்றவற்றையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் கண்காட்சி அரங்கில், பிரதமர் மோடி இதுவரை செய்த சாதனைகள், புதிய இந்தியாவை உருவாக்க அவர் செய்த செயல்கள், மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ஆகியவை திரையிடப்படும்” என்று கூறியுள்ளார்.