மத்தியப் பிரதேச மாநிலம், மெளகஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த 23ஆம் தேதியன்று, சிறுமி அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகிய மூவரும் ஆம்புலன்சில் பயணித்துள்ளனர். அந்த ஆம்புலன்சில், இவர்கள் மட்டுமல்லாது ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரும் இருந்துள்ளனர். இவர்களில் யாரும் நோயாளிகள் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியின் சகோதரியும் அவரது கணவரும் தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டும் என்று சொல்லி ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்கியுள்ளனர். இவர்கள் வருவதற்குள் ஆம்புலன்ஸ் அந்த சிறுமியோடு புறப்பட்டுள்ளது. அதன் பிறகு, ஆம்புலன்ஸ் டிரைவரின் கூட்டாளியான ராஜேஷ் கேவாட், ஆம்புலன்சில் வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்று இரவு முதல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மறுநாள் காலையில் சாலையோரத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.
இதில் சோர்வான நிலையில் வீட்டுக்கு வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், இந்த சம்பவம் குறித்து போலீசிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், ஆம்புலன்ஸ் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த ராஜேஷ் கேவாட் ஆகியோர் பாலியல் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவர் வேண்டுமென்றே தான் சிறுமியை ஆம்புலன்ஸிலேயே விட்டு கீழே இறங்கியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதனால், தலைமறைவாக இருக்கும் சிறுமியின் சகோதரி மற்றும் அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆம்புலன்சில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.