Skip to main content

“முஸ்லிம்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட வேண்டும்” - சாமியாரின் பேச்சால் சர்ச்சை!

Published on 29/11/2024 | Edited on 29/11/2024
Controversy over the preacher's speech about muslim

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்தின் கீழ் தான் அதிக சொத்துக்கள் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சொத்துக்களை கண்காணிப்பதற்காக 1954ஆம் ஆண்டி வக்ஃப் சட்டம் கொண்டுவரப்பட்டு, 1958ஆம் ஆண்டில் அனைத்து மாநிலங்களிலும் வக்ஃபு வாரியங்கள் அமைக்கப்பட்டது. அன்று முதல் வக்ஃபு சட்ட விதிகளின்படி, வக்ஃபு வாரிய சொத்துக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவில், இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர் அல்லாதோர் வக்ஃபு வாரியத்தில் இடம்பெற செய்வது, வக்ஃபு நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. 

அப்போது இந்த மசோதாவிற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் கடும் சர்ச்சைகள் இருக்கும் காரணத்தால், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். அந்த குழுவில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலும் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இஸ்லாமியர்களுக்கு வாக்குரிமையை பறிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று சாமியார் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வக்ஃபு வாரியம் வெளியிட்ட நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கும் வகையில், கடந்த 26ஆம் தேதி பாரதிய கிசான் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் விஸ்வ வொக்கலிகா மகா சமஸ்தான மடத்தின் சாமியார் சீர் குமார சந்திரசேகர நாத சுவாமி பேசினார். அப்போது அவர், “விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும். வக்ஃபு வாரியம் யாருடைய நிலத்திற்கும் உரிமை கோரலாம் என்று கூறப்படுகிறது.. இது பெரிய அநியாயம். யாரோ ஒருவரின் நிலத்தை பறிப்பது தர்மம் அல்ல. எனவே, விவசாயிகளின் நிலம் தங்களிடம் இருக்க அனைவரும் போராட வேண்டும்” என்று கூறினார். 

முஸ்லீம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என்று இவர் கூறிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்த நாள், தான் கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்