மேற்கு வங்கத்தின் நாரதா இணையதளம், கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு புலனாய்வு நடவடிக்கையை நடத்தியது. அந்த நடவடிக்கையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில், திரிணாமூல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் போலி நிதிநிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதையும் மீறி திரிணாமூல் காங்கிரஸ் பெரும் வெற்றியைபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பிறகு இந்த வீடியோ தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது அமைச்சர்களாக இருக்கும் பிர்ஹத் ஹக்கீம், சுப்ரஜா முகர்ஜி, எம்.எல்.ஏ மதன் மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ, மேற்கு வங்க ஆளுநரிடம் அனுமதி கேட்டது. ஆளுநரும் நால்வர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதியளித்தார்.
இதனையடுத்து இன்று (17.05.2021) இரண்டு அமைச்சர்கள் உட்பட நான்கு பேரையும் சிபிஐ கைது செய்ததோடு, விசாரணை நடத்த மேற்கு வங்கத்தில் இருக்கும் தங்கள் தலைமை அலுவலகத்திற்கு கொண்டுசென்றது. இதனையறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, சிபிஐ அலுவலகத்திற்கு திரிணாமூல் கட்சி நிர்வாகிகளுடன் விரைந்தார். இது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.