Skip to main content

ஊரடங்கு எதிரொலி ; 450 கிலோமீட்டர் நடைப்பயணம்... பாதி வழியில் உயிரிழந்த தமிழக இளைஞர்...

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


ஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த தமிழக இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்துள்ளார். 

 

tamil youth passed away in telangana

 

 

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53,000-ஐ கடந்துள்ளது. 2,12,018 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் தற்போது வேகமாகப் பரவிவரும் இந்த கரோனா வைரஸ் 2000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர், 190 பேர் குணமாகியுள்ளார். இதனையடுத்து கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சொந்த மாநிலத்தை விட்டு வெளிமாநிலத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளிகள் ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் அடிப்படை வசதிகளுக்கே சிரமப்படும் அவர்கள், போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடைப்பயணமாகவே தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கின் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்துவந்த தமிழக இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்துள்ளார்.
 

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வந்துள்ளார்.ஊரடங்கின் காரணமாகத் தமிழகம் திரும்ப முயன்ற அவர்,போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாததால் அங்கிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்துள்ளார்.இந்நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.உணவு, தங்குமிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காதச் சூழலில் சொந்த ஊருக்கு நடந்து வந்த 23 வயது இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்