இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பாராளுமன்ற கட்டடம் 93 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆதலால், இந்த பாராளுமன்றத்திற்குப் பதிலாக, புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இப்புதிய பாராளுமன்ற கட்டடம், அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையில், நான்கு தளங்களோடு, 971 கோடியில் கட்டப்படவுள்ளது.
இதற்கான பணிகள் தொடங்க இருந்த நிலையில், புதிய நாடளுமன்ற கட்டடத்துக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வாங்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்து, புதிய நாடளுமன்ற கட்டடத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புதிய நாடளுமன்ற கட்டடத்திற்கு எதிராக வழக்கு நிலுவையில் இருக்கையில், அதன் கட்டுமானப் பணிகளை எப்படி தொடங்கலாம் என அதிருப்தி தெரிவித்ததோடு, கட்டுமானப் பணிகளைத் தொடங்கமால் பூமி பூஜை மட்டும் நடத்தலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளித்து உச்சநீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் இருவர், புதிய நாடாளுமன்ற கட்டடப் பணிகளைத் தொடங்கலாம் என அனுமதியளித்துள்ளனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான அரசாணை செல்லும். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த அனுமதியும் செல்லுபடியாகும் வகையிலும் சரியாகவும் உள்ளது என கூறியுள்ளது. இருப்பினும் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட, பாரம்பரிய பாதுகாப்பு குழுவிடம் அனுமதி வாங்கவேண்டும் என கூறி புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.