இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 3.97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, மத்திய - மாநில அரசுகள் நிதிச் சுமையில் இருப்பதாலும், நிதி பற்றாக்குறையாலும் கரோனா மரணங்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என தெரிவித்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பினை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன்படி பேரிடரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உட்பட பாதிக்கப்பட்டோருக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்குவது கட்டாயம் என கூறியுள்ளது.
பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவு 12ன் கீழ் பரிந்துரைகளை வழங்காததன் மூலம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கடமையை செய்வதிலிருந்து தவறிவிட்டது என கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், கரோனாவால் இறந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளதோடு, கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.