சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பிடும் முறையை அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான வழக்குகள் இன்று (22/06/2021) டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், "கரோனா சூழலில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது. இக்கட்டான சூழலில் மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்லி நிர்பந்திக்க முடியாது. தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் அது சிக்கலை ஏற்படுத்தி விடும். சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்யப்பட்டது சரியானதே" என வாதிட்டார்.
மத்திய அரசின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு எதிரான மனுவையும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 10, 11, 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் வழங்க அங்கீகாரம் அளித்து உத்தரவிட்டனர்.