பிரதமர் மோடி ஏர் இந்தியாவை பாராட்டியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியன் ஸ்வாமி, பாராட்டுக்கள் உண்மை என்றால், அதனை உண்மையாக்கும் வகையில் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முடிவை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை கரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட் 19 பரவல் காரணமாக 1300 க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சீனாவின் உகான் நகரத்திற்கு சென்று அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை இந்திய அரசு மீண்டும் இந்தியா அழைத்து வந்தது. ஏர் இந்தியாவின் உதவியோடு நடத்தப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன.
இந்நிலையில் ஏர் இந்தியாவின் இந்த செயலை பிரதமர் மோடி நேற்று பாராட்டியிருந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, "சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து இந்தியர்களை ஏர் இந்தியா தைரியமான முயற்சிகள் மேற்கொண்டு அழைத்து வந்ததை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார் என்று டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நல்லது. ஆனால், ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகளைக் கைவிடுமாறு மத்திய விமான போக்குவரத்து அமைச்சரவைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்த வேண்டிய நேரம் இது. நீங்கள் உண்மையாகவே பாராட்டியிருந்தால் அதற்கு அதுதான் அர்த்தம்" என தெரிவித்துள்ளார்.