நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும், கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று, இந்த நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த தேர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "ஜே.இ.இ.தேர்வுக்கு விண்ணப்பித்த 8.58 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். நீட் தேர்வைப் பொறுத்தவரை, விண்ணப்பித்த 15.97 லட்சம் மாணவர்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் 24 மணி நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். எப்படி இருந்தாலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.