சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் மிகமுக்கிய புள்ளியாக பார்க்கப்பட்டது ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்டம். இன்னமும் சிஏஏ வுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் நோக்கி பேரணி சென்றுகொண்டிருந்த போது, திடீரென ஒரு நபர் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்தவர்களை சுடப்போவதாக கூச்சலிட்டார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அந்த நபரிடம் பேச முயற்சித்த போது, அந்த நபர் சுட்டதில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. இதனையடுத்து அந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். துப்பாக்கிசூடு நடத்திய கோபால் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த துப்பாக்கி சூட்டால் டெல்லியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நடத்திய போராட்டத்தை நேற்று இரவே மாணவர்கள் முடித்துக் கொண்ட நிலையில், இன்று காலையில் மீண்டும் பழைய போலீஸ் தலைமை அலுவலகம் முன் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.