மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கல் எறியும் திருவிழாவில் கற்கள் தாக்கியதில் 400க்கும் மேற்பட்ட கிராமத்தினர் காயமடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் ஜாம் நதிக்கரையில் உள்ள இரு கிராமங்களில் இந்த திருவிழா நடைபெறும். பந்தூர்னா மற்றும் சவரகோன் ஆகிய இரு கிராமங்களும் இந்த நதிக்கரையில் உள்ளன. இந்த திருவிழா நாளன்று இந்த இரு கிராம மக்களும் நதிக்கரையில் கூடுவர். ஆற்றின் நடுவில் கம்பத்தில் கொடி ஒன்று நடப்பட்டிருக்கும். இந்த கொடியை யார் எடுக்கிறார்களோ அந்த கிராமமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த கொடியை யார் எடுப்பது என்ற போட்டியில் இரு கிராமத்தினரும் வேகமாக முன்னேறுவர். அப்போது ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொடியை எடுத்து விடாமல் தடுக்க எதிர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கற்களை எறிந்து தடுப்பார்கள். இறுதியில் இந்த கல் அடிகளையும் மீறி எந்த கிராமத்தை சேர்ந்தவர் கோடியை எடுக்கிறாரோ அந்த கிராமமே இதில் வென்றதாக அறிவிக்கப்படும்.
நேற்று மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த திருவிழாவில் 400 பேர் காயமடைந்தனர். இதில் 12 பேர் மோசமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பந்தூர்னா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், அவர் காதலித்த சவரகோன் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் ஜாம் நதியை கடந்த போது அவர்கள் இருவரையும் சவரகோன் கிராமத்தினர் கற்களை கொண்டு தாக்கியதாகவும், அப்போது பந்தூர்னா கிராமவாசிகள் அவர்களை காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதன் நினைவாகவே ஆண்டுதோறும் இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.