தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் லாஸ்யா நந்திதா (37). முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் செகந்திரபாத் கண்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (23-02-24) அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செரு சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் உள்ள இருந்த லாஸ்யா நந்திதா படுகாயமடைந்தார். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நந்திதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நந்திதா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். கார் ஓட்டுநர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நந்திதா காரில் சென்று கொண்டிருந்த போது நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் ஆட்டோ மீது மோதி விபத்தில் சிக்கினார். அவரது தலையில் காயம் ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 10 நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்டோன்மென்ட் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த சயன்னா, ஓராண்டுக்கு முன்பு இறந்ததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.