
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியரான ஸ்டேன் சுவாமி, மனித உரிமை ஆர்வலராக செயலாற்றி வந்தவர். ஜார்கண்டில் பழங்குடியினருக்காக ஐந்து தசாப்தங்களாக தொடர்ந்து குரல் கொடுத்துவந்த இவர்மீது 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோரேகான் வன்முறையில் தொடர்பிருப்பதாகவும், தடைசெய்யபட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் குற்றஞ்சாட்டி தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு கைது செய்தது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டமும் (உபா) பாய்ந்தது.
ஏற்கனவே பார்கின்சன் நோயால் அவதிப்பட்டுவந்த ஸ்டேன் சுவாமிக்கு, சிறையில் கரோனா தொற்றும் ஏற்பட்டது. இதனால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஐந்தாம் தேதி உயிரிழந்தார்.
ஸ்டேன் சுவாமி மரணத்தையடுத்து சர்வதேச அளவில் இந்தியா மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்தநிலையில் ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தகுந்த ஆதாரங்களின்றி கைது செய்யப்படும் மனித உரிமை ஆர்வலர்களும், மற்றவர்களும் உடனடியாக விடுதலை செய்யபட வேண்டும் என்பதை ஸ்டேன் சுவாமியின் மரணம் அனைத்து நாடுகளுக்கும் உணர்த்த வேண்டும்" என கூறியுள்ளார்.
மேலும் "ஸ்டேன் சுவாமியின் மரணம், இந்திய மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட தீராத கரையாக இருக்கும் என தெரிவித்துள்ள மேரி லாலர், "மனித உரிமை ஆர்வலர்களை தீவிரவாதிபோல் நடத்தவுதற்கு எப்போதும் மன்னிப்பு கிடையது. கைது செய்யப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு ஸ்டேன் சுவாமி இறந்ததை போல் மனித உரிமை ஆர்வலர்கள் இறக்க எந்த காரணமும் கிடையாது" எனவும் தெரிவித்துள்ளார்.