ஆந்திரா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றதில் இருந்து, முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டி வருகிறார். அந்த வகையில் ஜெகன்மோகனின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி இருந்தார்.
இதனையடுத்து திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டன. இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் திருப்பதி திருமலை கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமண தீட்சதலு பேசுகையில், “பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்தது மற்றும் தரம் குறைவாக இருந்ததை நான் பல வருடங்களுக்கு முன்பே கவனித்தேன். இது தொடர்பான புகாரைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கோயில் அறக்கட்டளையின் தலைவர் முன் வைத்தேன். ஆனால் அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.
இப்போது, புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அரசு அனைத்து குழப்பங்களையும் நீக்குவதாக உறுதியளித்துள்ளது. ஏற்கனவே அரசு பால் பண்ணைகளில் இருந்து சுத்தமான பசு நெய்யை வாங்கி வந்த அவர்கள், தற்போது சுத்தமான நெய்யில் உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த 5 ஆண்டுகளாக லட்டில் விலங்கு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து மகா பாவம் செய்துவிட்டார்கள். எனவே கோடிக்கணக்கான பக்தர்கள் அதீத நம்பிக்கையும் பக்தியும் கொண்டுள்ள புண்ணியக் கோயிலில் இது போன்ற மகா பாவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.