மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் கடந்த 8 ஆம் தேதி மக்களவையில் தொடங்கியது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து பேசுகையில், “கடந்த முறை நான் பேசியபோது அதானி விவாகரத்தில் கவனம் செலுத்தியதால் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போது நான் உண்மையைத் தான் சொன்னேன்.இன்று என் பேச்சு அதானி பற்றியது இல்லை என்பதால் பா.ஜ.க நண்பர்கள் பயப்படத் தேவையில்லை” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, அதானியும் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வத்ராவும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தைக் காட்டி தனது விவாதத்தைத் தொடங்கிப் பேசினார். அப்போது, 1993 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அதானிக்காக முந்த்ரா துறைமுகத்தில் இடம் கொடுத்தனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அதானி நிறுவனத்துக்கு ரூ.72,000 கோடி கடன் கொடுத்தனர். காங்கிரஸ் ஆட்சியில் அதானிக்கு பல்வேறு மாநிலங்களில் துறைமுகப் பணிகள் கொடுக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதே போல், கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் அதானியுடன் ராபர்ட் வத்ரா இருந்த புகைப்படத்தை பா.ஜ.க வெளியிட்டு விமர்சித்திருந்தது.
இந்த நிலையில், தொழிலதிபர் ராபர்ட் வத்ரா மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில் அவரை பற்றி மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி ஊடகத்தில் பேசிய அவர், “ மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்மிருதி ராணி அதைப் பற்றி பேசாமல் என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்களைப் பேசி வருகிறார். அதனால் என் பெயரை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இ.ந்.தி.யா. கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வலுவான போட்டியை கொடுக்கும். காங்கிரஸ் இணைந்துள்ள இ.ந்.தி.யா என்ற எதிர்கட்சிக் கூட்டணி அவர்களுக்கு நல்ல போட்டியை வழங்குவோம். எனது மனைவி பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்கான அனைத்து திறமைகளும் அவருக்கு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவர் சென்றால் சிறப்பாக பணியாற்றுவார். காங்கிரஸ் கட்சி அதை ஏற்று சிறப்பாக திட்டமிடும் என நம்புகிறேன்” என்று கூறினார்.