புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம், உறுப்பினர்கள் கேள்வி பதில் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. அப்போது புதுச்சேரி மாநிலத்தில் மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகள் திறக்கப்படுமா எனறு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பேரவையில் போர்க்கொடி தூக்கினர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, "நேரடி பணப் பரிமாற்றம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச திட்டங்களுக்கான விநியோகம் செய்யும் பொருட்களுக்கு பதிலாக பணமாக வங்கியில் செலுத்தப்படுகின்றது. ரேஷன் கடையில் பணியாற்றிய ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை வழங்க ரூ.7 கோடிக்கு ஒப்புதல் கேட்டு தலைமை செயலருக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட தானியங்கள் விநியோகிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.” எனக் கூறினார்.
தொடர்ந்து உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு "புதுச்சேரி கோரிமேட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே 50 கோடி ரூபாய் செலவில் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். புதுச்சேரியில் சரக்கு கப்பல் போக்குவரத்து துவங்கியதை தொடர்ந்து கண்டெய்னர்கள் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு அனுப்ப அதற்கென தனியாக ரிங் ரோடு போட நடவடிக்கை எடுக்கப்படும்." என பதிலளித்தார்.