'ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா' என மகாராஷ்டிரா மாநில சபாநாயகர் ராகுல் நார்வேகர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், என்சிபி ஆதரவுடன் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார். இரண்டரை ஆண்டுக்கு பின் சிவசேனா பிளவுபட்டு பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியில் அமர்ந்தார். அவருடன் சென்ற 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உத்தவ் தாக்ரே சார்பில் முறையிட்டது.
இந்த கோரிக்கை மீது சபாநாயகர் ராகுல் நார்வேகர் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சிவசேனா உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் சபாநாயகருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தகுதி நீக்கம் குறித்து இன்றைக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், 'ஒரு கட்சி தலைவரின் விருப்பத்தை ஒரு கட்சியின் ஒட்டுமொத்த விருப்பமாக கருத முடியாது என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நார்வேகர், 'ஏக்நாத் ஷிண்டேதான் சிவசேனா கட்சியின் உண்மையான தலைவர். 2022 ஆம் ஆண்டு ஷிண்டேவின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது. ஷிண்டேவை சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தவ் தாக்கரேவிற்கு அதிகாரம் இல்லை' என தெரிவித்துள்ளார்.