Skip to main content

பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு எதிரான வழக்கு - விரைவில் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!

Published on 02/08/2021 | Edited on 02/08/2021

 

modi amitshah

 

சிபிஐயில் சிறப்பு இயக்குநராக இருந்துவந்தவர் ராகேஷ் அஸ்தானா. இவருக்கும் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் சிபிஐயிலிருந்து மாற்றப்பட்டனர்.

 

ராகேஷ் அஸ்தானா, விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு, அவர் ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களே இருந்த நிலையில், டெல்லியின் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மேலும், அவருக்கு ஒரு வருட பதவி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. டெல்லி அரசு ராகேஷ் அஸ்தானாவின் நியமனத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

இந்தநிலையில், வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் ராகேஷ் அஸ்தானா டெல்லி ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எம்.எல். ஷர்மா தனது மனுவில், யூபிஎஸ்சி, முடிந்தவரை இரண்டு வருட பதவிக்காலம் மீதமிருக்கும் அதிகாரிகளைத்தான் உயர்பொறுப்புக்குப் (ஆணையர் போன்ற பதவிகளுக்கு) பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கை வரும் ஐந்தாம் தேதியன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.